Saturday, February 28, 2009

திருக்குறள் - படிவம் 2

1. புகபட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். ( 237 )

விளக்கம்:
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

கருத்து: தன் புகழின்மைக்கு தாமே காரணம்; பிறரல்ல.

2. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். ( 415 )

விளக்கம்:
வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல வாழ்க்கையில் வழுக்கல் நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

கருத்து: துன்பம் நிகழும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.

3. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா நுழை. ( 594 )

விளக்கம்:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

கருத்து:
ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.

Monday, February 16, 2009

திருமுருகுத் தமிழ் வாழ்க!

கனிந்த வணக்கம்.

அன்பு மாணவர்களே, தமிழாசிரியர்களே..! நலமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய உலகம் தகவல் மயமாய் மாறிவருகிறது. இணைய பயன்பாடு கல்வித் துறையிலும் வளர்ந்து விட்டது. கால சூழலுக்கேற்ப நாமும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம்.

திருமுருகுத் தமிழ் வாழ்க! - நம் பள்ளியின் தமிழ் மொழி கலைத்திட்ட மெம்பாட்டு மையதின் ஒரு கன்னி முயற்சி.

நோக்கம் , கற்றல் கற்பித்தலில் தமிழ் இலக்கியம் தொடர்பான செய்யுள், திருக்குறள், பழமொழி, இணைமொழி, உவமைத் தொடர், மரபுத்தொடர் போன்ற PMR மாணவர்களை மையப்படுத்தி வலைப்பதிவாகிறது.

இனையத்தில் வலைப்பூ புதிய ஒன்றல்ல! சுமார் 9 ஆண்டுகளாக பவனி வருகிறது. தமிழில் வலைப்பூ எமக்கு அறிமுகமானது 2004 ஆரம்பத்தில்.
அவ்வப்போது எழுதி வருகிறேன்.

அந்த வகையில், SMK Tmn. Desa Skudai, தமிழ் மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் சார்பில், மாணவர்களே,
தமிழ் ஆசிரியர்களே.....உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து அழைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் மறுபொழியை பதிக்க மறவாதீர்!

நன்றி.

சகப்பயணி

Sunday, February 15, 2009

செய்யுள் - படிவம் 3 ( திருவருட்பா )


திருவருட்பா - திருவருட் பிரகாச வள்ளலார்

2. இயற்கையுண்மை வடிவினரே அணையவாரீர்
எல்லாஞ்செய் வல்லவரே அணையவாரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவாரீர்
எல்லார்க்கு நல்லவரே அணையவாரீர்
இயற்கையின்ப மானவரே அணையவாரீர்
இறைமையெலா முடையவரே அணையவாரீர்
இயற்கைநிறை வானவரே அணையவாரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர்.


விளக்கம்:


இறைவன் இயற்கையே உருவானவர்; உண்மைப் பொருளாகவும்
விளங்குகின்றார்; அனைத்தையும் செய்யும் ஆற்றல் உடையவர்; உயிர்கள்
அறிவு விளக்கம் பெறச்செய்பவர்; விருப்பு வெறுப்பு இல்லாமல்
எல்லார்க்கும் நல்லவராக இருப்பவர்; உயிர்களுக்கு இன்பத்தை அளிப்பவர்;
உயிர்களுக்குத் தலைமை தாங்கும் பண்மை உடையவர்; பஞ்சபூதங்களாகக்
காட்சி தருபவர். அனைத்துமாக இருக்கின்ற இறைவன் அருள்புரிய
வேண்டும்.

செய்யுள் - படிவம் 3 ( அறநெறிச்சாரம் )

அறநெறிச்சாரம் - ஒளவையார்

1. எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.

விளக்கம்:
உலகின் எல்லாப் பிறப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதப்
பிறப்பைவிடச் சிறந்த பிறப்பு வேறொன்றுமில்லை. அத்தகைய சிறப்பு
வாய்ந்த பிறப்பில் கற்கவேண்டியவற்றைக் கற்க வேண்டும். கற்றறிந்த
அறிஞர்களின் அரிய கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட பிறவியின்
பயனை அடைய வழிவகுக்கும்.

உவமைத் தொடர் - படிவம் 3

 1. இருதலைக் கொள்ளி எறும்பு போல = எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை
 2. ஊமை கண்ட கணா போல = வெளியே சொல்ல முடியாமை
 3. குடத்திலிட்ட விளக்கு போல = திறமை வெளியே தெரியாமை
 4. தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல = தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி
 5. நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்த்தது போல= உயர்வான ஒன்றிற்கு மெல்ல கேடு விளைவித்தல்

மரபுத் தொடர் - படிவம் 3

 1. அரக்கப்பரக்க = அவசரமும் பதற்றமுமாக
 2. ஈயாடவில்லை = அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியில்லை
 3. ஏட்டிக்குப் போட்டி = எதிருக்கெதிராகச் செயல்படுதல்/விதண்டாவாதம்
 4. வலைவீசுதல் = வசப்படுத்த முயலுதல் / தீவிரமாகத் தேடுதல்
 5. கங்கணம் கட்டுதல் = உறுதி பூணுதல்

இணைமொழி - படிவம் 3

 1. இன்ப துன்பம் = சுக துக்கம்
 2. ஊண் உறக்கம் = உணவும் தூக்கமும்
 3. சீரும் சிறப்பும் = மேன்மை/உன்னத நிலை / ஏற்றம் மிகுந்த
 4. பற்றும் பாசமும் = ஆழ்ந்த அன்பு
 5. வரவு செலவு = வருமானமும் செலவும்

பழமொழியும் விளக்கமும் - படிவம் 3

1. அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

விளக்கம்:
நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

விளக்கம்:
தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக
இருந்தாலும் நாளடைவில் மிகவும் எளிதாகி விடும்.

3. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

விளக்கம்:
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ
இல்லாத போதுதான் வெளிப்படும்.

4. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

விளக்கம்:
எந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.

5. பதறாத காரியம் சிதறாது.

விளக்கம்:
பொறுமையுடன் செய்யப்படும் ஒரு செயல் சிறப்பாக முடிவு பெறும்.

திருக்குறள் - படிவம் 3

1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ( 504 )


விளக்கம்:
ஒருவனுடைய குனங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுந்திருப்பவற்றால் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்து:
ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து அவர் எத்த்கையோர்

எனத் தீர்மானம் செய்யலாம்.


2. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெரின். ( 648 )

விளக்கம்:
கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் வல்லவரைப்
பெற்றால் உலகத்தார் அவர்கள் சொன்ன வேலையை உடனே செய்வார்கள்.

கருத்து:
இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.

3. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( 664 )

விளக்கம்:
ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும்
சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.

கருத்து:
சொன்னப்டி நடக்க வேண்டும்; விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

குருவாய் வருவாய்.....

நினைத்தபடி தரிசனம் கொடுத்திட....
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
========================================
விளக்கம்:
உருவாகவும், அருவாகவும், அன்பர்க்கு உள்ள பொருளாகவும், அன்பர் அல்லார்க்கு இல்லாத பொருளாகவும், ஞானம் ஆன நறுமணப் பொருளாகவும், அம்மனத்தின் மூலமாகன மலராகவும், ஒன்பது மணிகளாகவும், மணியின் ஒளியாகவும், அனைத்துக்கும் மூலப் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், வீடு பேற்றினை அடையும் நன்னெறியாகவும், அதனால் பெறப்படும் வீடு பேறாகவும் விலங்கிடும் குகப்பெருமானே! குருவாக எழுந்தருளி வந்து எம்மைக் காத்தருள்வீர்! என்று குகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்.