Saturday, June 25, 2011

தன்னை அறியும் அறிவு

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே!

திருமூலர்

Thursday, December 30, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2011

கனிந்த வணக்கம்.

தாமான் டேசா இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகம், அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் 2011 ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாணவர்களே,

மீண்டும் பள்ளிக்கு வரவிருக்கிறீர்கள். அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!
புதிய ஆண்டில் , புத்தம் புதிய சிந்தனைகளுடனும் உற்சாகத்துடனும் கல்வி ஆண்டை எதிர்க்கொள்ள இருக்கிறீர்கள். எனவே, இக்கல்வி ஆண்டில், வரவிருக்கும் சவால்களையும் பிரச்னைகளையும் துணிவுடன் எதிர்க்கொள்ளுங்கள். கல்வி மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து, அதனை முழுமுயற்சியுடன் கற்று வெற்றிபெற‌ வாழ்த்துகிறோம்.

முயற்சி திருவினையாக்கும்.


தமிழ் மொழிக்கழகம்,
தாமான் டேசா, இடைநிலைப்பள்ளி,
81300 ஸ்கூடாய்.

Monday, May 18, 2009

கோலப் போட்டி _- தமிழ் மொழிக் கழகம்

டேஸா ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளியின் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 08.05.2009(வெள்ளிக் கிழமை) கோலப் போட்டி நடைபெற்றது.

அங்கே எடுக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ இல‌த்திர‌ன் ப‌ட‌ங்க‌ளை இங்கு காண‌லாம்:

"நாங்களும் கோலம் போடுவோம்ம்..ல" என்கிறார்களா?


மயில் கோலம் எப்படி இருக்கிறது..பாருங்கள்!

பல வண்ணக் கோலங்கள்..பங்கேற்ற மாணவர்களில் சிலர்...!

Tuesday, March 10, 2009

பழமொழி - படிவம் 2

1. அடாது செய்பவன் படாது படுவான்

விளக்கம்:
தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

2. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

விளக்கம்:
ஒருவர் இளமையில் கைகொள்லும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் இருந்து வரும்.

3. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

விளக்கம்:
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.

4. வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்

விளக்கம்:
வாழ்க்கையில் கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

5. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

விளக்கம்:
ஒரு செயலை நிறைவேற்றுவதில் நம் மனமும் கவனமும் முழுமையாகப் பதியுமானால் அதனைச் செய்து முடிக்கும் வழிமுறைகளும் தானாகப் பிறக்கும்.

Saturday, February 28, 2009

திருக்குறள் - படிவம் 2

1. புகபட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். ( 237 )

விளக்கம்:
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

கருத்து: தன் புகழின்மைக்கு தாமே காரணம்; பிறரல்ல.

2. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். ( 415 )

விளக்கம்:
வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல வாழ்க்கையில் வழுக்கல் நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

கருத்து: துன்பம் நிகழும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.

3. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா நுழை. ( 594 )

விளக்கம்:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

கருத்து:
ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.

Monday, February 16, 2009

திருமுருகுத் தமிழ் வாழ்க!

கனிந்த வணக்கம்.

அன்பு மாணவர்களே, தமிழாசிரியர்களே..! நலமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய உலகம் தகவல் மயமாய் மாறிவருகிறது. இணைய பயன்பாடு கல்வித் துறையிலும் வளர்ந்து விட்டது. கால சூழலுக்கேற்ப நாமும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம்.

திருமுருகுத் தமிழ் வாழ்க! - நம் பள்ளியின் தமிழ் மொழி கலைத்திட்ட மெம்பாட்டு மையதின் ஒரு கன்னி முயற்சி.

நோக்கம் , கற்றல் கற்பித்தலில் தமிழ் இலக்கியம் தொடர்பான செய்யுள், திருக்குறள், பழமொழி, இணைமொழி, உவமைத் தொடர், மரபுத்தொடர் போன்ற PMR மாணவர்களை மையப்படுத்தி வலைப்பதிவாகிறது.

இனையத்தில் வலைப்பூ புதிய ஒன்றல்ல! சுமார் 9 ஆண்டுகளாக பவனி வருகிறது. தமிழில் வலைப்பூ எமக்கு அறிமுகமானது 2004 ஆரம்பத்தில்.
அவ்வப்போது எழுதி வருகிறேன்.

அந்த வகையில், SMK Tmn. Desa Skudai, தமிழ் மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் சார்பில், மாணவர்களே,
தமிழ் ஆசிரியர்களே.....உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து அழைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் மறுபொழியை பதிக்க மறவாதீர்!

நன்றி.

சகப்பயணி

Sunday, February 15, 2009

செய்யுள் - படிவம் 3 ( திருவருட்பா )


திருவருட்பா - திருவருட் பிரகாச வள்ளலார்

2. இயற்கையுண்மை வடிவினரே அணையவாரீர்
எல்லாஞ்செய் வல்லவரே அணையவாரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவாரீர்
எல்லார்க்கு நல்லவரே அணையவாரீர்
இயற்கையின்ப மானவரே அணையவாரீர்
இறைமையெலா முடையவரே அணையவாரீர்
இயற்கைநிறை வானவரே அணையவாரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர்.


விளக்கம்:


இறைவன் இயற்கையே உருவானவர்; உண்மைப் பொருளாகவும்
விளங்குகின்றார்; அனைத்தையும் செய்யும் ஆற்றல் உடையவர்; உயிர்கள்
அறிவு விளக்கம் பெறச்செய்பவர்; விருப்பு வெறுப்பு இல்லாமல்
எல்லார்க்கும் நல்லவராக இருப்பவர்; உயிர்களுக்கு இன்பத்தை அளிப்பவர்;
உயிர்களுக்குத் தலைமை தாங்கும் பண்மை உடையவர்; பஞ்சபூதங்களாகக்
காட்சி தருபவர். அனைத்துமாக இருக்கின்ற இறைவன் அருள்புரிய
வேண்டும்.